×

கள்ளச்சாராய சாவுகள் நடைபெறாமல் இருக்க டாஸ்மாக் கடைகளில் பனங்`கள்’ விற்பனை

நெல்லை, மே 19: தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களின் விலை அதிகமாக இருப்பதால், சிலர் கிராமப்புறங்களில் கள்ளச்சாராயத்தைத் தேடிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஒருவரின் குடி பழக்கத்தால் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படுகிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். அதற்கு ஒரேதீர்வு, பனங்கள் இறக்கவும், விற்பனை செய்யவும் அனுமதிப்பதுதான். பனங்கள்ளை, நம் முன்னோர் பனம்பால் என்றும் சொல்வார்கள். பனைமரத்தில் இருந்து, சுண்ணாம்பு உள்ளிட்ட எதுவும் சேர்க்காமல் 100 சதவீதம் இயற்கையாகக் கிடைப்பதுதான் இந்த பனங்கள்.

இதைக் குடித்தால் சிறிது நேரத்துக்குத்தான் போதை இருக்கும். பனங்கள் அருந்துவது தமிழர் வாழ்வில் இணைந்திருந்த ஒன்றுதான். ஆனால் மது வகைகள், உடலுக்கு தீங்கை மட்டுமே ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில் உயிரிழப்பை தரக்கூடியது, இந்த சாராயம். ஆனால், பனங்கள் அப்படி கிடையாது. விலை மலிவாகக் கிடைக்கும் பனங்கள்ளை ஒரு தொழிலாளி குடிப்பதால், உடல் பாதிப்பு எதுவும் ஏற்படாது, ஆரோக்கியமாக இருப்பார். ஒரு பனைத் தொழிலாளி பனங்கள் இறக்கி விற்கும்போது பனை மரங்கள் வைத்துள்ள அனைவருக்கும் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும்.

கிராமப்புறங்களில் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பனை மரங்களை வளர்க்கும் ஆர்வமும் பெருகும். தமிழ்நாட்டின் மரமான பனையின் எண்ணிக்கை அதிகரிக்கும். பனங்கள் இறக்க வழங்கப்படும் அனுமதியால், கிராமப்புறங்களில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும். விலை மலிவான பனங்கள் பயன்பாட்டால் கள்ளச்சாராயம் யாருக்கும் தேவைப்படாது. விலை குறைவாக கள்ளத்தனமாக விற்கப்படும் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தால், விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் பலியாகும் அவலமும் ஏற்படாது. பனம்பால் என்கிற பனங்கள் டாஸ்மாக் கடைகளிலேயே விற்பனை செய்ய அரசு முன் வரவேண்டும். இதை நான் சட்டமன்றத்திலும் வலியுறுத்தி உள்ளேன். அண்டை மாநிலங்களான கேரளாவிலும், ஆந்திராவிலும் பனங்கள் இறக்க அனுமதி உள்ளது. எனவே தமிழ்நாடு முதல்வர், பனங்கள் இறக்க அனுமதி தந்து, பனங்கள்ளை டாஸ்மாக் கடைகளிலும் விற்பனைக்குக் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கள்ளச்சாராய சாவுகள் நடைபெறாமல் இருக்க டாஸ்மாக் கடைகளில் பனங்`கள்’ விற்பனை appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Nellai ,Tamil Nadu Congress ,Nanguneri ,MLA ,Ruby Manokaran ,Villupuram district ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் 44% பீர் விற்பனை உயர்வு